அடிப்படை தேவைக்கு நீரின்றி பாப்பனம் கிராம மக்கள் அவதி
கமுதி, : கமுதி அருகே பாப்பனம் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.கமுதி அருகே பாப்பனம் ஊராட்சிக்குட்பட்ட முத்துவிஜயபுரம், குன்றங்குளம், புல்லந்தை, பாப்பனம், தீர்த்தான் அச்சங்குளம் கிராமத்தில் 1000 குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. பருவமழை காலங்களில் பெய்து வரும் மழைநீரை ஊருணி, கண்மாயில் தேக்கி வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாப்பனம் கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் போதுமான அளவு தண்ணீர் வழங்க முடியவில்லை. இதனால் மக்கள் வேறுவழியின்றி டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.ஊராட்சி தலைவர் அமுதா கூறியதாவது, பாப்பனம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கிராமத்தில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதிகளவு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.