மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்
ராமநாதபுரம்:நடத்தை சந்தேக தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த கணவருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.ராமநாதபுரம் கோழிக்கூட்டுத்தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் 47. சலுான் கடை நடத்தி வந்தார். மனைவி சண்முகபிரியா 37. மனைவியின் நடத்தையில் மோகன் ராஜிற்கு சந்தேகம் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 2018 மார்ச் 18 ல் இப்பிரச்னையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மோகன்ராஜ் , கத்தியால் சண்முகபிரியாவின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார். ராமநாதபுரம் பஜார் போலீசார் இவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. மோகன்ராஜிற்கு ஆயுள் தண்டனை, ரூ.3000 அபராதம் விதித்து நீதிபதி கே.கவிதா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.என். கீதா ஆஜரானார்.