பாதுகாக்கப்படுமா வைகை: பள்ளம் என நினைத்து குப்பை கொட்டும் அவலம்
பரமக்குடி: - பரமக்குடியில் அள்ளப்படும் குப்பையை வைகை ஆற்றில் கொட்டி பள்ளங்களை நிரப்பும் பணி போல் பணியாளர்கள் செயல்படும் நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாதால் ஆறு சுருங்கி ஒட்டுமொத்த நகருக்கும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது. பரமக்குடி நகராட்சியில் காட்டுப்பரமக்குடி துவங்கி காக்காதோப்பு வரையிலும் மற்றும் வைகை நகர் துவங்கி ஜீவா நகர் வரையிலும் ஆற்றின் இருபுறங்களிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில் வைகை ஆற்றின் கரையோரம் மணல்மேடாக்கி ரோடு அமைக்கப்பட்டது. இச்சூழலில் இரு புறங்களிலும் நகராட்சி பணியாளர்கள் குப்பை கொட்டி அள்ளிச் சென்றனர். சில மாதங்களாக குப்பை உட்பட சாக்கடை கழிவுகள், வெட்டப்பட்ட மரங்களின் கழிவுகள், கட்டட இடிமானங்களை இங்கு கொட்டுவது அதிகரித்துள்ளது. இவர்கள் வைகை ஆற்றை பள்ளமாக நினைத்து அவற்றை மூடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து பருவநிலை மாற்றங்களால் வைகை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு செல்லும் சூழலில் பரமக்குடி நகருக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. மேலும் கழிவுநீர் ஒருபுறம் குட்டையாக தேங்கும் நிலையில், கழிவு மணல் ஆற்று நீரில் அடித்துச் செல்லும் போது ராமநாதபுரம் பெரிய கண்மாய் உட்பட வைகை ஆற்றின் கிளை கால்வாய் துவாரங்கள் அடைபடும் சூழல் உள்ளது. மேலும் ஒட்டுமொத்த ஊற்றுக்கும் குப்பை எமனாகி வருகிறது. இது குறித்து நகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. ஆகவே பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷாகவுர் வைகையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.--