கடன் உதவி பெற 4 மணி நேரம் காத்திருந்து பெண்கள் அவதி
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த மகளிர் சுய உதவிக்குழுகளுக்கான வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சிக்காக காலை 8:00 மணிக்கு வந்த பெண்கள் மதியம் 12:15 மணி வரை காத்திருந்து போதிய அடிப்படை வசதிகளின்றி சிரமப்பட்டனர்.அமைச்சர் உதயநிதி மதுரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் திட்ட இணைப்புகள் வழங்கி துவக்கி வைத்ததையொட்டி ராமநாதபுரத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் பங்கேற்க 598 மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் காலை 8:00மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டனர். காலை 11:00 மணிக்கு துவங்கும் என எதிர்பார்த்த நிகழ்ச்சி மிகவும் காலதாமதமாக மதியம் 12:15 மணிக்கு துவங்கியது. இதனால் குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள், வயதான பெண்கள் போதிய குடிநீரும் இல்லை. டீ, காபி கூட தரவில்லை. தங்களை அலைக்கழித்து விட்டனர் என அதிருப்தி தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் 598 மகளிர் குழுக்களுக்கு ரூ.47 கோடியே 33 லட்சத்தில் சுழல் நிதி வங்கி கடனுதவிகளை வழங்கினார்.எம்.எல்.ஏ.,க்கள் பரமக்குடி முருகேசன், திருவாடானை கருமாணிக்கம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.