பஸ்கள் மோதல் 10 பயணியர் படுகாயம்
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நேற்று அதிகாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. காலை, 7:35 மணிக்கு கீழக்கரையில் இருந்து வந்த அரசு டவுன் பஸ் ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அரண்மனை சென்றது.அப்போது, ரயில்வே பீடர் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து, அரசு போக்குவரத்து பணிமனை அருகே முன்னால் சென்ற புதுமடம் அரசு டவுன் பஸ் மீது மோதியதில், கீழக்கரையில் இருந்து வந்த பஸ்சின் முன்பக்கம், புதுமடம் பஸ்சின் பின்புற கண்ணாடிகள் உடைந்தன. இரு பஸ்களில் பயணம் செய்த, 10க்கும் மேற்பட்ட பயணியர் சிறு காயமடைந்தனர். கீழக்கரை பஸ்சில் பிரேக் பழுதானது தான் விபத்திற்கு காரணம் என, தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.