தோப்பில் 564 கிலோ கஞ்சா பதுக்கிய 10 பேருக்கு கம்பி
கேணிக்கரை: இலங்கைக்கு கடத்துவதற்காக, தோப்பில் பதுக்கி வைத்திருந்த, 564 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 10 பேரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்தவர்களை கேணிக்கரை போலீசார் விசாரித்தனர். அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக தெற்கு வாணி வீதி கிராமத்தில் உள்ள தோப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். அந்தப் பகுதியில் நேற்று போலீசார் ஆய்வு செய்தபோது, தோப்பு வீட்டில், 564 கிலோ கஞ்சா சிக்கியது. கடத்தலில் ஈடுபட்ட மானாமதுரை விக்னேஷ்குமார், 30; புதுக்கோட்டை சஞ்சீவ், 22; ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ரஞ்சித், 30; யோகேஸ்வரன், 25, உட்பட, 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, இரு கார்கள், நான்கு டூ - வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.