ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு; 13 குடும்பங்கள் கலெக்டரிடம் புகார்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையில் இருதரப்பு தகராறில் ஒருதரப்பை சேர்ந்த 13 குடும்பங்களை ஒதுக்கிவைத்து, அவர்கள் படகில் மீன்பிடிக்க, திருமணம், இறப்பு, கோயில் திருவிழாவில் பங்கேற்க தடைவிதித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.மோர்பண்ணையைச் சேர்ந்த சிங்காரம் மனைவி காளீஸ்வரி, கோவிந்தராஜ் உள்ளிட்ட 13 குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.இதுகுறித்து காளீஸ்வரி, கோவிந்தராஜ் ஆகியோர் கூறியது: ஊரில் இருதரப்பு தகராறில், ஒரு தரப்பிற்கு ஆதரவாக ஊர் பெரியவர்கள் செயல்படுகின்றனர். எங்களுடன் தொடர்பில் உள்ள 13 குடும்பங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் மீன்பிடிதொழில் செய்யவிடாமல் தடுக்கின்றனர். திருமணம், இறப்பு, கோயில் விழாவில் பங்கேற்க தடைவிதித்துள்ளனர். ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் நடைபெற உள்ள கோயில் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.