171 யூனிட் மணல் ஏலம் விட முடிவு
தொண்டி : தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் 171 யூனிட் திருட்டு மணலை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.திருவாடானை தாலுகா தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் பகுதியில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு முள் வேலி அடைக்கப்பட்டிருந்த இடத்தில் மணல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து மருங்கூர் குரூப் வி.ஏ.ஓ. ரேணுகா புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்தனர். இது குறித்து ராமநாதபுரம் கனிம வள அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் கனிம வள உதவி இயக்குநர் விஜயகுமார், திருவாடானை தாசில்தார் அமர்நாத் மற்றும் போலீசார் மணல் குவியலை பார்வையிட்டனர்.கனிம வள அலுவலர்கள் கூறுகையில், விதிகளை மீறி கண்மாய்கள், ஓடைகள், ஆறுகள் மற்றும் விவசாய நிலங்களில் மணல் திருடப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தது. ஆய்வு செய்ததில் 171 யூனிட் மணல் உள்ளது. இந்த மணலை ஏலம் விட ஆர்.டி.ஓ., விற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றனர்.