உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கட்டணம் செலுத்தியும் கிடைக்காத 30 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

கட்டணம் செலுத்தியும் கிடைக்காத 30 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

ராமநாதபுரம்:-தமிழகத்தில் தட்கல் திட்டத்தில் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி 30 ஆயிரம் மின் இணைப்பிற்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தமிழகவிவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியிருப்பதாவது: மின் இணைப்பு கேட்டால் விவசாயிகள் 15 ஆண்டுகளாக காத்திருக்கும் நிலை உள்ளது.இதற்கு மாற்றாக 2018 ல் தட்கல் முறையில் விவசாயிகளுக்கு வேளாண் மின் இணைப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 5 எச்.பி., மின் இணைப்புக்கு ரூ.2.50 லட்சம், 7.5 எச்.பி.,க்கு ரூ.2.75 லட்சம், 10 எச்.பி., க்கு ரூ.3 லட்சம், 15 எச்.பி., க்கு 4 லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 90 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் 1.50 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்தனர். 2018 முதல் 2023 வரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் இணைப்புகள் இதுவரை வழங்கப்படவில்லை. மின் கம்பம், மீட்டர் பாக்ஸ் இல்லை என காரணம் கூறுகின்றனர். எனவே 30 ஆயிரம் விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கக் கோரி காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம், கரூர், தஞ்சாவூர்,கோவை, ஈரோடு, திருச்சி,மதுரை, திருநெல்வேலி ஆகிய தலைமை பொறியாளர் அலுவலகங்களில் அக்.1ல் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். அதன் பின் அக்.22 முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !