திருவாடானை தொகுதியில் 31 ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு வாக்காளர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டாம்
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் 31 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவாடானை சட்டசபை தொகுதியில் டிச.,19 நிலவரப்படி 1 லட்சத்து 36 ஆயிரத்து 38 ஆண்கள், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 379 பெண்கள், பிறர் 22 என 2 லட்சத்து 73 ஆயிரத்து 439 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டது. ஒரு ஓட்டுச்சாவடியில் 1200 வாக்காளர்கள் எண்ணிக்கை இருந்தால் அதை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. திருவாடானை சட்டசபை தொகுதியில் ஏற்கனவே 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில் 31 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்படடு 378 ஆக உயர்ந்துள்ளது. புதிய ஓட்டுச்சாவடிகள் விபரம் வருமாறு: திருவாடானை தாலுகாவில் நெய்வயல், புல்லுார், எஸ்.பி.பட்டினம், சமத்துவபுரம், தொண்டி கடற்கரை பகுதி, தெற்கு தோப்பு, நம்புதாளை, முள்ளிமுனை. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் கூடலுார், ஆவரேந்தல், ஆர்.எஸ்.மங்கலம் மூன்று, அடர்ந்தனார்கோட்டை, இருதயபுரம். ராமநாதபுரம் தாலுகாவில் சித்தார்கோட்டை, அத்தியூத்து, தொருவளூர், களத்தாவூர், சக்கரக்கோட்டை இரண்டு, வாணி, தெற்குதரவை, சோகையன்தோப்பு, பனைக்குளம் இரண்டு, அழகன்குளம் இரண்டு, பட்டணம்காத்தான் ஆகிய ஓட்டுச்சாவடிகள் புதிதாக அதிகரிக்கபட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.