ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் வீடு திரும்பினர்
ராமேஸ்வரம்: இலங்கையில் விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விமானம் மூலம் சென்னை வந்து பின்னர் வீடு திரும்பினர். ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 27ல் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். பின்னர் செப்.,26ல் கைதான மீனவர்களில் படகு உரிமையாளரான ஜஸ்டின் என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.2.50 லட்சம் அபராதமும், மற்ற 4 மீனவர்களுக்கு தலா ரூ. 50,000 அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சைமன், மோகன், டென்சன், சேகர் ஆகியோர் நேற்று காலை இலங்கை கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்திறங்கினர். இவர்களை ராமேஸ்வரம் மீன்துறையினர் வேனில் அழைத்து வந்து தங்கச்சிமடத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.