கும்பாபிேஷகத்தில் பக்தர்களிடம் திருடிய 25 பவுன் நகை மீட்பு 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கும்பாபிேஷகத்தின் போது திரண்ட பக்தர்களிடம் திருடப்பட்ட 25 பவுன் நகைகளை மீட்ட போலீசார் துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்திதோப்பு பகுதியை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் மே 4ல் கும்பாபிேஷகம் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் உத்தரகோசமங்கை போலீஸ் ஸ்டேஷனில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கோவில்பட்டியை சேர்ந்த நகை பறிப்பு கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜகோபால் நகர் மந்திதோப்பு பகுதியை சேர்ந்த ரஜினி 48, அவரது இரண்டாவது மனைவி சரண்யா 29, ரஜினியின் முதல் மனைவியின் மகன் ராஜகிரி 28, அவரது மனைவி சந்தனமாரி 25, அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மனைவி விஜயா 60, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 பவுன் நகைகளை மீட்டனர்.