ஜனவரி முதல் 66 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
ராமநாதபுரம் ; ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன., முதல் 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் படி 2024 ஜன., முதல் இதுவரை குழந்தைகள் திருமணம் குறித்து தொலை பேசியில் 90 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 66 குழந்தை திருமணங்கள் நடப்பதற்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ளன. 18 திருமணங்கள் நடந்து முடிந்த பிறகு தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 9 குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 குடும்பத்தினர் மீது புகார் மனு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் 6 குழந்தை திருமணங்கள் வெளி மாவட்டங்கள் என்பதால் அந்தந்த மாவட்டங்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 130 பள்ளி, கல்லுாரிகளில் 25 ஆயிரத்து 975 மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.குழந்தை திருமணங்கள் குறித்த கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தை திருமணங்களை நிறுத்த கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் நடவடிக்கை எடுத்து வருகிறார். தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கிராமப்புறங்களில் நடத்தப்படவுள்ளது.