இமானுவேல் சேகரன் நினைவு நாளில் 7000 போலீசார் பாதுகாப்பு; எஸ்.பி., சந்தீஷ் பேட்டி
ராமநாதபுரம்; இமானுவேல் சேகரன் நினைவு நாளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தவுள்ளதாக எஸ்.பி., சந்தீஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.,11 நடைபெறும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் பி.என்.எஸ்.எஸ்.,163 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 7000 போலீசார் கூடுதலாக வரவழைக்கப்படவுள்ளனர். இதில் 24 ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 70 டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். நினைவு நாள் நடைபெறும் பகுதிக்கு இன்று, நாளை (செப்.10, 11) டூவீலர், வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அதை மீறி வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும்.வருபவர்களின் வசதிக்காக ராமநாதபுரம், சிவகங்கையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதை பயன்படுத்திக் கொள்ளலாம். ராமநாதபுரம் முழுவதும் 38 சோதனை சாவடிகள், 45 ரோந்து வாகனங்கள் மூலம் நினைவு நாளுக்கு வருபவர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள். வாகனங்களை கட்டுப்படுத்துவதற்காக 600 இடங்களில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 முதல் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இந்த ஆண்டு நவீன தொழில்நுட்ப முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதாவது 500 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டத்தை கட்டுப்படுத்த இரு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். முதல் முறையாக ட்ரோன் கேமராவில் பதிவாகும் காட்சிகள் நேரலையாக காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நினைவு நாள் நிகழ்வை மாலை 6:00 மணிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது என்றார்.