வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை மண்டகப்படியில் அன்னதான விழா ஏராளமானோர் பங்கேற்பு
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் உள்ள பட்டாபிஷேக ராமசுவாமிக்கு சைத்ரோத்ஸவ விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.வீரத் தளவாய் வெள்ளையன் சேர்வை மண்டகப்படி சார்பில் அங்குள்ள மண்டபத்தில் பட்டாபிஷேக ராமசுவாமி எழுந்தருளினார்.அங்கு விசேஷத் திருமஞ்சனம் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பெரிய தேரோட்டம் நடைபெற்ற அன்று வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை தொண்டு அறக்கட்டளை சார்பில் சத்திரம் அமைந்துள்ள பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து பக்தர்களும் பொதுமக்களும் மரியாதை செலுத்தினர். வீரத் தளவாய் வெள்ளையன் சேர்வை தொண்டு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஆர்.வி.ரத்தினக்குமார் மற்றும் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு புண்ணிய ஸ்தலங்களான திருப்புல்லாணி மற்றும் சேதுக்கரைக்கு வரக்கூடிய யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்களுக்கு வெள்ளையன் சேர்வை மண்டகப்படி சத்திரத்தில் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் வரக்கூடிய விழாக்களிலும், மாதங்களிலும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.