போலீசாரின் வாகனத்தை தாக்கிய வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் போலீசாரின் வாகனத்தை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில் 2022ல் காதலனை கட்டிப்போட்டு இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கமுதி கே.வேப்பங்குளம் முத்து அரியப்பன் மகன் பத்மேஸ்வரனை 25, போலீசார் கைது செய்தனர். அவரை 2022 மே 23 ல் கடலாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு போலீஸ் வேனில் கமுதிக்கு அழைத்துச் சென்ற போது பாதுகாப்பிற்கு வந்த போலீசாருடன் தகராறு செய்து வாகனத்தை சேதப்படுத்தினார். இவ்வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அரசு பணி செய்யவிடாமல் தடுத்து வாகனத்தை சேதப்படுத்திய பத்மேஸ்வரனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 24 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.