அபிராமம் பெரிய கண்மாயில் சீமை கருவேலமரங்கள்: துார்வாரப்படாததால் தண்ணீர் தேங்குவதில் சிக்கல்
அபிராமம் பெரிய கண்மாயில் தேக்கப்படும் தண்ணீரால் அபிராமம்அதனை சுற்றியுள்ள 2000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பயனடைந்து வந்தது. கண்மாய் வரத்துக் கால்வாய் முறையாக துார்வாரப்படாமல் உள்ளது.சீமைக்கருவேல மரங்கள்வளர்ந்து புதர்மண்டி உள்ளது. வரத்துக் கால்வாய் மணல் மேடாகி இருந்த இடம் தெரியாமல் மாறி வருகிறது. இதனால் பருவமழை காலத்தில் பெய்யும் மழை நீரைக் கூட தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டும் பயனில்லை. அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:பத்து ஆண்டுகளுக்கும்மேலாக அபிராமம் பெரிய கண்மாய் துார்வாரப்படவில்லை. தற்போது சீமைக்கருவேல மரங்கள்வளர்ந்து புதர்மண்டி உள்ளது. நீர் வரத்துக் கால்வாய் இருந்த இடம் தெரியாமல் மாறி வருகிறது. மேலும் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பார்த்திபனுார் மதகு அணை வழியாக அபிராமம் கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் துார்வாரப்படவில்லை. இதனால் குறைந்த அளவில் தான் தண்ணீர் கண்மாய்க்கு வந்தது. இந்த தண்ணீரும் எந்த பயன்பாடுமின்றி வீணாகிறது. விவசாயத்திற்கு கூடுதல் பணம் செலவு செய்து போர்வெல், டிராக்டர் தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.எனவே அபிராமம் பெரிய கண்மாய், பரளையாறு வரத்து கால்வாய் ஆகியவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் துார்வாரி இப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.