உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அழகிய அலையாத்தி காடுகள் நிறைந்த சேந்தனேந்தல் ஓடை படகு சவாரி துவக்க வலியுறுத்தல்

அழகிய அலையாத்தி காடுகள் நிறைந்த சேந்தனேந்தல் ஓடை படகு சவாரி துவக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்குக் கடற்கரை சாலை ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே சேந்தனேந்தல் ஓடை அமைந்துள்ளது. கோட்டைக்கரை ஆறு கடலில் சேரும் இடத்திற்கு முன்பாக அமைந்துள்ள இந்த ஓடையில் மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகள் அதிகளவில் எழில்மிகு தோற்றத்தில் அமைந்துள்ளன. இந்நிலையில், அலையாத்தி காடுகளில் செங்கால் நாரை, கொக்குகள், மற்ற பகுதிகளில் இருந்து வலசை வந்த வெளிநாட்டு பறவைகள் உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் இந்த அலையாத்தி காடுகளில் தாங்கி வருவதால் இந்தக் காடுகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமேஸ்வரம் சுற்றுலா செல்லும் சுற்றுலாப் பயணிகளை இந்த ஓடை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால் சுற்றுலா செல்லும் பயணிகள் ஓடைப்பகுதியில் ரோட்டில் நின்றவாறு போட்டோ எடுப்பது, செல்பி எடுப்பது உள்ளிட்டவைகளில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஓடையின் அழகை, ஓடையில் உள்ளே சென்று ரசிக்கும் வகையில் ஓடையில் உள்ள தண்ணீரில் சிறிய வகை படகு சவாரி துவங்கினால் சுற்றுலா பயணிகள் பயனடைவதுடன், அரசுக்கும் வருவாய் கிடைக்கும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் சேந்தனேந்தல் ஓடையில் சிறிய வகை படகு சவாரி துவங்கி அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !