மருத்துவமனை நுழைவு வாயிலில் 2 நாட்களாக கிடக்கும் முதியவர்
திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் இரு நாட்களாக முதியவர் கவனிப்பாரின்றி படுத்திருக்கிறார். திருவாடானை தாலுகா அலுவலகம் எதிரில் அரசு மருத்துவமனை உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களாக 80 வயதான ஒரு முதியவர் மருத்துவமனை நுழைவு வாயிலில் படுத்திருக்கிறார். யார் இவர், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டது போல் பேசுகிறார். சட்டை இல்லாமல் வெயிலில் படுத்திருக்கிறார். அவ்வப்போது யாராவது தனக்கு உதவ மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் பார்க்கிறார். இவரை தவிக்க விட்ட குடும்பத்தினர் யார் என்று தெரியவில்லை. இவருக்கு உதவியாக யாரும் இல்லாததால் மருத்துவமனையில் உள் நோயாளியாகவும் சேர்க்க முடியவில்லை என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். அந்த வழியாக சென்ற சிலர் பிஸ்கட் போன்ற உணவை கொடுக்கின்றனர். ஆனால் அவர் உண்ணுவதற்கான மனநிலையில் இல்லை. சமூக நல அலுவலர்கள் இந்த முதியவரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.