30 அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் கல்வி கற்பிக்க ஏற்பாடு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள 30 அரசுப் பள்ளிகளில் 'கல்வி 40 டிஜிட்டல் திட்டம்' சார்பில் ஸ்மார்ட் டிவிகளை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். அவர் பேசியதாவது: கல்வித் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய முன்னேற்றமாக 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதன் கீழ் 'கல்வி 40 டிஜிட்டல்' திட்டத்தில் 30 அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் சரளமாக வாசித்தல், எழுது தல், கணித அடிப்படை திறன்களில் பயிற்சி பெற முடியும். ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களின் தற்போதைய நிலையையும் டிஜிட்டல் கல்வி முறைக்கு பின் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ராமநாதபுரம், மண்டபம் ஒன்றியத்தில் 80 ஆசிரி யர்கள், 2000 மாணவர் களுக்கும் மேல் பயனடைவர். இதற்கு எல்.ஐ.சி., எச்.எப்.எல்., நிதியுதவி செய்துள்ளது. அரசுப் பள்ளியில் 3 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 16 ஆயிரம் வீடியோக்கள், 30 ஆயிரம் கேள்விகள், தினசரி விடுகதைகள், தினசரி அறநெறி கதைகள், முழுமையான மேம்பாட்டு வீடியோக்கள் இலவசமாக வழங்கப்படும். மாணவன் தொடக்க நிலையில் கற்றுக்கொள்ளும் கல்வி எதிர்கால வாழ்கைக்கு உதவியாக அமையும் என்றார். முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், பம்பிள் பி டிரஸ்ட் நிறுவனர் பிரேம் குமார் கோகுல தாசன், எல்.ஐ.சி., எச்.எப்.எல்., மதுரை கிளை தலைவர் சயீத் கலிமுத்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.