வாலிநோக்கம் கழிமுகத்துவாரத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை
வாலிநோக்கம், : -அக்., முதல் வாரத்தில் பருவ மழை பொழிவால் வெளிநாட்டு பறவைகள் வாலிநோக்கம் கழிமுகத்துவாரத்தில் இரை தேடுவதற்காக வருவது வழக்கம். தற்போது வாலிநோக்கம் கடலும், ஆறும் சேரக்கூடிய கழிமுகத்துவாரப் பகுதி மற்றும் பேக் வாட்டர் எனப்படும் தரவைப் பகுதிகளில் ஏராளமான சிறு மீன்களையும், நண்டு, நத்தை, சிறு பூச்சி, வண்டுகளை இரையாக உட்கொள்வதற்காக வெளிநாட்டு பறவைகள் வருகின்றன.பிளமிங்கோ, செங்கால் நாரை, கூழைக்கிடா, சிறு குருவி, குச்சி கால் நாரை, சாம்பல் நிற நாரை, நத்தைகுத்தி நாரை உள்ளிட்ட பறவைகள் இரை தேடுவதற்காக வருகின்றன. இப்பகுதியில் வரக்கூடிய வெளிநாட்டு பறவைகள் அருகே உள்ள மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்திற்கு சென்று மரத்தில் கூடுகட்டி குஞ்சு பொரித்தவுடன் அவற்றையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.நடப்பாண்டில் பெய்த பருவ மழையால் இன்னும் பறவைகள் வரத்து துவங்காத நிலை உள்ளது. வாலிநோக்கம் தரவைப் பகுதியில் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட பகுதியில் இருந்து வரக்கூடிய வெளிநாட்டு பறவைகளை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.