வெடி வைத்து மீன் பிடிப்பதை காட்டிக் கொடுத்தவர் மீது தாக்கு
தொண்டி: தொண்டி புதுக்குடியில் வெடி வைத்து மீன் பிடிப்பதால் மற்ற மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு மீன்வளத்துறை அலுவலர்களிடம் வெடி வைத்து மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று சில மீனவர்கள் புகார் செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன், துணை இயக்குநர் வேல்முருகன், தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் மற்றும் மரைன் போலீசார் முன்னிலையில் கூட்டம் நடந்தது. மீனவர்கள் கலந்து கொண்டனர். வெடி வைத்து மீன் பிடிக்கக் கூடாது, லைட் வெளிச்சத்தில் மீன் பிடிக்க கூடாது. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பேசினர். கூட்டம் முடிந்து அதிகாரிகள் சென்றனர். அப்போது மீனவர்களிடையே தகராறு ஏற்பட்டது. வெடி வைத்து மீன் பிடிக்கும் செயலில் ஈடுபட்ட சிலர், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாக கூறி அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை தாக்கினர். ராமகிருஷ்ணன் புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.