பெர்மிட் இன்றி சிரமப்படும் ஆட்டோ டிரைவர்கள்: கலெக்டரிடம் முறையீடு
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் ஆட்டோ டிரைவர்கள் பெர்மிட் இல்லாமல் சிரமப்படுகிறோம், எங்களை தொடர்ந்து தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் முறையிட்டனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த வழிவிடுமுருகன் ஆட்டோ டிரைவர்கள் நலச்சங்கத்தினர் 20க்கு மேற்பட்டோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு கூட்டத்திற்கு சென்று வரும் போது அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உடனிருந்தார். மனுவில், ராமேஸ்வரத்தை பூர்வீகமாகக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி பிழைத்து வருகிறோம். பெர்மிட் வைத்துள்ள ஆட்டோக்கள் ரூ.5 லட்சம் விற்பனையாகிறது. இதனால் வெளியூர் ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறோம். இதற்கு போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர். எங்களுக்கு பெர்மிட் வழங்கி தொடர்ந்து ஆட்டோ இயக்கி தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்திலும் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர்.