உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திசை மாறி வீசும் காற்றால் படகுகள் கவிழ்கிறது: அச்சத்தில் மீனவர்கள்

திசை மாறி வீசும் காற்றால் படகுகள் கவிழ்கிறது: அச்சத்தில் மீனவர்கள்

தொண்டி: கடலில் திசைமாறி வீசும் காற்றால் படகு கவிழ்வது தொடர்கிறது. மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் சமீப நாட்களாக வழக்கமாக வீசும் காற்று திசைமாறி வீசுகிறது. இதனால் சூறாவளி ஏற்பட்டு படகு கவிழ்வது தொடர்கிறது. தற்போது சோழக கொண்டல் காற்றுக்கு பதிலாக கச்சான் காற்று வீசுவதால் கடலுக்குள் சூறாவளி ஏற்பட்டு படகுகள் கவிழ்வது வாடிக்கையாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்திலும் நேற்று முன்தினம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்பண்ணை கடலில் படகு கவிழந்து 4 மீனவர்கள் தப்பினர். இது குறித்து தொண்டி மகாசக்திபுரம் மீனவர்கள் கூறியதாவது- வடக்கில் இருந்து வீசும் காற்று வாடை என்றும், தெற்கில் வீசும் காற்று தென்றல், கிழக்கில் வீசும் காற்று சோழக கொண்டல் என்றும், மேற்கில் வீசும் காற்று கச்சான் காற்று எனப்படும். தற்போது சோழக கொண்டல் காற்று வீச வேண்டும். ஆனால் ஆடி மாதம் வீச வேண்டிய கச்சான் காற்று தற்போது வீசுகிறது. இக் காற்று திடீரென்று சூறாவாளியாக மாறுவதால் படகுகள் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டு கவிழ்கிறது என்றனர். மரைன் போலீசார் கூறுகையில், கடலில் படகுகள் கவிழ்வதால் மீனவர்கள் உயிர் பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்ல வேண்டும். படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானால் விசில் சத்தத்துடன் ஊதவேண்டும். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து காப்பாற்ற வாய்ப்பு உள்ளது. மரைன் போலீஸ் ஸ்டேஷனையும் தொடர்பு கொள்ள வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி