ராமேஸ்வரத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டவர் உடல் தோண்டி எடுப்பு
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்தவரை கொலை செய்து புதைத்த விவகாரத்தில் நேற்று வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீசார் உடலை தோண்டி எடுத்தனர்.ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நம்புராஜன் 48. இவரது நண்பர் வெண்மணிநகரைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் 47. இருவரும் தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். இந்நிலையில் 26 நாட்களாக நம்புராஜனை காணவில்லை என அவரது சகோதரி ராணி போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து நண்பரான வெங்கட சுப்பிரமணியனிடம் போலீசார் விசாரித்ததில், 'வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனநலம் பாதித்த தங்கையிடம் பாலியல் சில்மிஷம் செய்த நம்புராஜனை அடித்து கொலை செய்ததையும், உடலை வீட்டு முன்பு புதைத்து உள்ளேன்,' என்றார்.நேற்று ராமேஸ்வரம் தாசில்தார் முரளிதரன் முன்னிலையில் போலீசார் புதைத்த உடலை தோண்டி எடுத்தனர். பின் டாக்டர் குழு பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். வெங்கடசுப்பிரமணியன் மீது கொலை வழக்கு பதிந்து போலீசார் சிறையில் அடைத்தனர்.