திருப்புல்லாணி மீன் மார்க்கெட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள்.. அரசு நிதி வீணடிப்பு
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஊராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாகியும் பயன்பாடில்லாத நிலையில் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.திருப்புல்லாணி வடக்கு ரத வீதியில் பெரிய மதகுக்குட்டம் ஊருணிக் கரையோரம் தற்போது தற்காலிகமாக மீன் மார்க்கெட் செயல்படுகிறது.மழை மற்றும் வெயில் காலங்களில் மீன் வியாபாரிகளின் சிரமத்தை குறைக்கவும், சீரான ஒரே முறையில் அமர்ந்து வியாபாரம் செய்வதற்கு ஏற்ற வகையில் பத்து கடைகள் கொண்ட மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டது.கடந்த 2017ல் ரூ.8.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட மீன் கடைகள் தற்போது எவ்வித பயன்பாடின்றி உள்ளது. எஸ்.டி.பி.ஐ., கட்சியின் நிர்வாகி அப்துல் வஹாப் கூறியதாவது:திருப்புல்லாணி ஊராட்சியால் கட்டப்பட்ட மீன் மார்க்கெட் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி காட்சிப் பொருளாகவே உள்ளது. எனவே மீன் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கி தந்து அவற்றில் மீன் விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.இது குறித்து திருப்புல்லாணி பி.டி.ஓ.,விடம் மனு கொடுத்துள்ளேன் என்றார்.