வணங்கானேந்தலில் பஸ் ஸ்டாப் தேவை தினமலர் செய்தியால் செடிகள் அகற்றம்
பரமக்குடி: பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் இரு வழிச்சாலையில் தினமலர் செய்தி எதிரொலியாக ரோட்டோரம் செடிகள் அகற்றப்பட்ட நிலையில் பஸ் ஸ்டாப் அமைக்க மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை உள்ள நிலையில் தொடர்ந்து ராமநாதபுரம் நோக்கி இருவழிச்சாலை செல்கிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் நோக்கி ஏராளமான வாகனங்கள் தினம் தினம் செல்கிறது. பரமக்குடி, ராமநாதபுரம் சாலை ஓரங்களில் அரசு, தனியார் பள்ளிகள் உட்பட ஏராளமான கிராமங்கள் இருக்கிறது.இப்பகுதியில் மஞ்சூருக்கு அருகில் உள்ள வணங்கானேந்தல் ரோட்டோரம் பஸ் ஸ்டாப் இன்றி தினமும் காலை, மாலை என பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் காத்திருக்கின்றனர். டிச.1ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் ரோட்டோரங்களில் இருந்த செடிகள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் பஸ்ஸ்டாப் அமைத்து கிராம மக்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.