ராமேஸ்வரத்தில் கேக் வெட்டி போராட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் 25 ஆண்டுகளாக செயல்படாமல் பாதாள சாக்கடை திட்டம் முடங்கியிருப்பதைக் கண்டித்து இந்திய கம்யூ., கட்சியினர் கேக் வெட்டி நுாதன போராட்டம் செய்தனர்.புனித நகரான ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த 2000ம் ஆண்டில் அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அடிக்கல் நாட்டினார். பின் 2019ல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ரூ.57 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணியை துவக்கியது. இந்தப் பணி முடிவடைந்த நிலையில் கழிவு நீரை சுத்திகரிக்கும் மையத்திற்கு குழாய் அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது.இதனால் கோயில் ரத வீதி மற்றும் முக்கிய தெருக்களில் பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இத்திட்டம் 25 ஆண்டுகளாக மந்தமாக நடப்பதைக் கண்டித்து நேற்று முன்தினம் இந்திய கம்யூ., கட்சியினர் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு கேக் வெட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.நகர் செயலாளர் செந்தில், நிர்வாகிகள் முருகானந்தம், வடகொரியா, ஜீவானந்தம், வெங்கடேசன், செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.