உழவரை தேடி முகாம்கள் விவசாயிகளுக்கு அழைப்பு
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மாதம் இருமுறை நடக்கும் உழவரை தேடி திட்ட முகாம்களில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநர் தினேஷ்வரி கூறினார். அவர் கூறியிருப்பதாவது:வேளாண் துறை, தோட்டக்கலை துறை மற்றும் கால்நடை சம்பந்தமாக வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளால் உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிர் சார்ந்த தொழில் நுட்பங்களையும், வேளாண் துறை, சார்பு துறைகளின் திட்டங்களையும் விளக்கி கூறப்படும். மாதம் இருமுறை அதாவது 2வது, 4வது வெள்ளிக்கிழமைகளில் திருவாடானை தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு ஆண்டிற்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.முதல் கட்டமாக மருங்கூரில் நடந்தது. அடுத்தடுத்து நடக்கும் முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றார்.