கிழக்கு கடற்கரை சாலையில் அணிவகுத்து நிற்கும் கார்கள் விபத்து அபாயம்
கீழக்கரை: கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள்செல்லும் நிலையில் ரோட்டோரம் ஏராளமான வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம் உள்ளது.கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ராமேஸ்வரம், நாகப்பட்டினம், துாத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள் செல்கின்றன. 2020 கொரோனா காலத்திற்கு பிறகு கீழக்கரை வடக்கு பகுதியில் ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறங்களிலும் அதிகளவில்வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் புதிதாக உருவாகியுள்ளன.வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக உள்ளதால் கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் அதிகளவு ஆக்கிரமிப்பு உள்ளது. சாலையின் வலது மற்றும் இடது ஓரங்களில் கார்களை வரிசையாக நிறுத்தி வைத்து விட்டு செல்லும் போக்கு தொடர்கிறது.இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்துள்ளன. இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு ரோட்டோரத்தில் கார்களை நிறுத்தியதால் நேற்று முன்தினம் ஒதுங்க முடியாமல் அரசு டவுன் பஸ் மோதி மீனவர் பலியானார்.கீழக்கரை போலீசார் இருபுறம் வாகனங்களை நிறுத்துவதை தடை செய்ய வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.