உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை போலீஸ்காரர்   மீதான வழக்கு ஏப்.5க்கு  தள்ளிவைப்பு  

இலங்கை போலீஸ்காரர்   மீதான வழக்கு ஏப்.5க்கு  தள்ளிவைப்பு  

ராமநாதபுரம் : போதைப் பொருள் திருடி தலைமறைவாகி தப்பி வந்து தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு விசாரணை ஏப்.,5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இலங்கை கொழும்பு புறநகர் சபுகஸ்கந்த பகுதி மரக்கடையில் இருந்து 2020- ஆக., 26ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இது தொடர்பாக கைதான மரக்கடை உரிமையாளர் அளித்த தகவலின் படி அனுர குமார என்பவரை போலீசார் பிடித்தனர். அனுர குமார இலங்கை துறைமுகம் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் 32, அண்ணன் ஆவார். பிரதீப் குமார் பண்டாரா தான் இலங்கை துறைமுகம் காவல் நிலையத்தில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை பணி நேரத்தில் திருடி சகோதரரிடம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர்.இதனால் பிரதீப் குமார் பண்டாராவை வழக்கில் சேர்த்து விசாரிக்க அந்நாட்டு போலீசார் முடிவு செய்தனர். இதை அறிந்த அவர் பைபர் படகில் தமிழகம் தப்பி வந்தார். 2020 செப்., 4 ல் மண்டபம் கடலோர காவல் படை போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது இலங்கை போலீஸ்காரர் நேரில் ஆஜரானார். நீதிபதி மெகபூப் அலிகான் ஏப்.,5ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி