ரூ.29.85 லட்சம் கையாடல் சகோதரர்கள் மீது வழக்கு
கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சேரன் தெருவை சேர்ந்தவர் முகமது நபீல், 27. இவர் கீழக்கரையில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்துகிறார். இவரது நிறுவனத்தில், 2020ல் கீழக்கரையை சேர்ந்த முகமது சுபைதீன், கணக்காளராக பணியில் சேர்ந்தார். அதன்பின், 2021ல் முகமது நபீல், ஆந்திராவில் சட்டக்கல்லுாரியில் படிக்க சென்றார். அப்போது, நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளை முகமது சுபைதீனிடம் ஒப்படைத்து சென்றார். இந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை குறைபாடு இருப்பதாகவும், பணம் சரியாக செலுத்தப்படவில்லை என்ற புகார்கள் வந்தன.இதையடுத்து, முகமது நபீல், 2023 ஏப்., முதல் 2024 ஆக., வரையிலான நிறுவன கணக்குகளை ஆய்வு செய்துள்ளார். இதில், முகமது சுபைதீன், அங்கு பணிபுரிந்த அவரது தம்பி பரூக்மரைக்கா இணைந்து, 29 லட்சத்து 85,000 ரூபாயை கையாடல் செய்திருப்பது தெரிந்தது. முகமது நபீல், புகாரின்படி, சகோதரர்கள் முகமது சுபைதீன், பரூக்மரைக்கா மீது வழக்குப்பதிவு செய்த கீழக்கரை போலீசார் அவர்களை தேடுகின்றனர்.