அரசுப் பள்ளியில் கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்தது
திருவாடானை: அரசு தொடக்கப்பள்ளி கூரையில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மாணவர்கள் தப்பினர்.திருவாடானை அருகே சிறுகம்பையூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.29 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளி வராண்டா முன்பு கூரையிலிருந்து சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. நடமாட்டம் இல்லாததால் மாணவர்கள் தப்பினர். இது குறித்து சிறுகம்பையூர் முன்னாள் ஊராட்சி தலைவர் குமார் கூறியதாவது:இந்த பள்ளி கட்டடம்20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கட்டடம் சேதமடைந்து விட்டது. எனவே கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மீண்டும் கூரை இடிந்து பெரும் விபத்து ஏற்படுவதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.