ராமநாதபுரத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் ரூ.737 கோடி திட்டங்களை துவக்குகிறார் 50,752 பேருக்கு உதவிகளை வழங்குகிறார்
ராமநாதபுரம்:முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு ராமநாதபுரம் வந்தார். இன்று (அக்., 3) மாவட்டத்தில் ரூ.737 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்து 50,752 பேருக்கு ரூ.42.68 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். ராமநாதபுரத்தில் செப்.,29 முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ேஷாவும், செப்., 30ல் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியானதையடுத்து செப்.,29, 30 முதல்வர் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டன. கரூர் சம்பவத்தால் முதல்வர் ஸ்டாலின் 1.5 கி.மீ., துாரம் நடந்த சென்று வர்த்தகர்கள், மீனவர்கள், வியாபாரிகள் பொதுமக்களை சந்திக்கும் ரோடு ேஷா நிகழ்ச்சி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா மட்டும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு ராமநாதபுரம் வந்தார். அவர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இன்று காலை 9:30 மணிக்கு பேராவூரில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.737 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முடிவற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார். பின் 50 ஆயிரத்து 752 பேருக்கு ரூ.42 கோடியே 68 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ஏற்பாடுகளை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர். டி.ஐ.,ஜி., மூர்த்தி, எஸ்.பி., சந்தீஷ் மேற்பார்வையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.