குழந்தைகள் இல்லங்கள் முன்மாதிரி சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் முன்மாதிரி சேவை விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகள் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு முன் மாதிரியான சேவை விருதுகள் ரூ.4 லட்சம் மதிப்பில் நவ.,14ல் குழந்தைகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகள் அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் ஆகிய நான்கு பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு உரிய வழிமுறைகள், தகுதிகள், மற்றும் குறியீடுகளின் படி கலெக்டர் தலைமையிலான தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு உரிய பரிந்துரைகளின் படி பெறப்படும் கருத்துருக்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் மூலம் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் இல்லம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றிற்கு முன்மாதிரி சேவை விருதுகள் வழங்கப்படும். தகுதியான நிறுவனங்கள் தங்கள் கருத்துருக்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலெக்டர் அலுவலக வளாகம், நீதிமன்றம் தென்புறம்,ராமநாதபுரம் 623 503 என்ற முகவரிக்கு ஆக.,5 மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.