இலங்கையில் சீன மருத்துவ கப்பல்; பாதுகாப்புத் துறையினர் கண்காணிப்பு
ராமேஸ்வரம்; இலங்கைக்கு வந்துள்ள 'சமாதான பேழை' எனும் சீனா மருத்துவமனை கப்பலை டிச., 28 வரை நிறுத்திட இலங்கை அரசு அனுமதித்தது. இந்திய கடலோர பாதுகாப்புத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவுக்கு 'செக்' வைக்க இலங்கை திட்டமிடுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.இலங்கை திரிகோணமலை கடற்படை முகாமிற்கு, சீனாவின் சமாதான பேழை (peace ark) எனும் கடற்படை மருத்துவமனை கப்பல் நேற்று முன்தினம் வந்தது. இக்கப்பல் 178 மீ., நீளமுள்ளது. அறுவை சிகிச்சை மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட 310 பேர் பணிபுரிகின்றனர். இக்கப்பலில் உள்ள மருத்துவ சிகிச்சை குறித்து இலங்கை கடற்படை மருத்துவ குழுவிற்கு விளக்கி பயிற்சி அளிக்க வந்துள்ளதாகவும், டிச., 28வரை நிறுத்திட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக, இலங்கை கடல் பகுதியில் பிறநாட்டு போர், உளவுக் கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்தார். ஆனால் தற்போது 8 நாட்கள் சீன கப்பலை நிறுத்திட இலங்கை அனுமதித்தது, இலங்கை விவகாரத்தில் இந்தியா பெரியண்ணன் தொணியில் செயல்படக்கூடாது என மறைமுகமாக எச்சரிக்க சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சீனக் கப்பலின் விஜயம் குறித்து இந்திய கடலோர பாதுகாப்புத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.