உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள் ஆற்றில் கிடந்ததாக புகார் கலெக்டர் மறுப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்ததாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் முகாமில் பங்கேற்ற பரமக்குடியை சேர்ந்த விவசாயி பரமானந்தம் பேசுகையில், ''பரமக்குடி தெளிச்சாத்தநல்லுார் வைகை கரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்பட்ட மூன்று மனுக்கள் கிடந்தன. அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்,'' என கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோனிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ''உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்கள் பெறப்பட்டு ஒப்புகை சீட்டு அரசு அலுவலர் கையொப்பத்துடன் வழங்கப்படுகிறது. விவசாயி கொடுத்தமனுவில் அந்த மாதிரியான பதிவு எண், முத்திரை, அலுவலர் கையொப்பம் என எதுவும் இல்லை. இதை பெரிதுபடுத்த வேண்டாம். புகார் குறித்து விசாரிக்கப்படும்,'' என்றார். சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் கிடந்தது கண்டெடுக்கப் பட்டது. அதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.