| ADDED : ஜன 24, 2024 05:21 AM
தொண்டி : தொண்டி அருகே கொடிப்பங்கு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 9 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொண்டி அருகே கொடிப்பங்கு ஊராட்சியில் கொடிப்பங்கு, நாரேந்தல், கருத்தபத்தை, சவேரியார்பட்டிணம், செங்காலன் வயல், மண்மலகரை, ராஜாக்கவயல், அகரவயல், சிலுகவயல், வேலங்குடி, விளக்கனேந்தல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் சப்ளை இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொடிப்பங்கு ஊராட்சி தலைவர் சாந்தி கூறியதாவது: ஊராட்சியில் உள்ள 11 கிராமங்களில் செங்காலன்வயல், சவேரியார்பட்டிணம் ஆகிய கிராமங்களை தவிர்த்து மற்ற ஒன்பது கிராமங்களுக்கும் கடந்த நான்கு மாதங்களில் மூன்று நாட்கள் மட்டுமே குடிநீர் சப்ளை ஆனது. அதிலும் தண்ணீர் கலங்கலாக வந்ததால் பயன்படுத்த முடியவில்லை.இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு மனு அனுப்பியுள்ளேன் என்றார்.