ரெகுநாதபுரத்தில் வாரச்சந்தையில் தொடர் போக்குவரத்து நெரிசல்
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும் நிலையில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ரெகுநாதபுரம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பொருட்கள் வாங்கவும் விற்பனை செய்வதற்காகவும் சந்தைக்கு வருகின்றனர்.ரெகுநாதபுரம் - பெரியபட்டினம் செல்லும் பிரதான சாலையின் இரு புறங்களிலும் சந்தைக்கு வரக்கூடிய வாகனங்களை ரோட்டோரங்களில் தொடர்ந்து நிறுத்திச் செல்வதால் அவ்வழியாக செல்லக்கூடிய அரசு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே திருப்புல்லாணி போலீசார் உரிய முறையில் சாலையோர ஆக்கிரமிப்புகளையும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.