பரமக்குடி நகராட்சி கூட்டத்தில் கமிஷனர், இன்ஜினியர் இல்லை கொந்தளித்த கவுன்சிலர்கள்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி கூட்டம் நடந்த நிலையில் கமிஷனர், நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாததால்கவுன்சிலர்கள் கொந்தளிப்புடன் பேசினர். பரமக்குடி நகராட்சி கூட்டம் தலைவர் சேதுகருணாநிதி தலைமையில் நடந்தது. பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் மதுரைக்கு மாற்றும்சூழலை கைவிட்டு தொடர்ந்து செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நகராட்சி வழக்குகளை கையாள வக்கீல் ஜானகிராமன் நியமிக்கப்பட்டார். கூட்டத்தில் கமிஷனர், இன்ஜினியர், டி.பி.ஓ., என அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் கவுன்சிலர்கள் பலரும், அதிகாரிகள் இல்லாமல் எங்கள் வார்டு குறைகளை யாரிடம் கூறுவது. 2 மாதம் கழித்து நடக்கும்கூட்டத்தில் 117 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்.மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தலைவர்: கமிஷனர், டி.பி.ஓ., உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலக கூட்டத்திற்கு சென்றுள்ளனர். மற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார். தொடர்ந்து பரமக்குடியில் தெரு நாய்கள் மற்றும் மாடுகள் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தீர்மானங்களை வாசித்த பின் இன்ஜினியர் செல்வராணி கூட்டத்திற்கு வந்தார். சத்துணவு உதவியாளர் ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு)மதன், ஆர்.ஐ., நாகநாதன், மேலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.