கடல் அட்டை கடத்தியோருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின்
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட, 18 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மண்டபம் ஷேக் அப்துல் காதர், 50, ராமர், 25, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். இருவரும் ஜாமின் கோரி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி மெஹபூப் அலிகான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், 'இருவரும் தலா 45,000 ரூபாயை மண்டபம் உயிர்கோள காப்பக அறக்கட்டளை கணக்கில் டிபாசிட் செய்ய வேண்டும். மண்டபம் குந்துகால் விளக்க மையத்தில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த ஒரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். 'அதன் பின் இருவரும் மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10:30 மணிக்கு மண்டபம் சரக வன அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனையுடன் நேற்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.