மேலும் செய்திகள்
கடல் கொந்தளிப்பு: இரு படகுகள் சேதம்
13-Dec-2024
சாயல்குடி:மன்னார் வளைகுடா கடலில் நேற்று முன்தினம் இரவு 11:00 முதல் அதிகாலை 3:00 மணி வரை வீசிய சூறாவளியால் எழுந்த பேரலைகளின் தாக்கத்தால் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கீழமுந்தல், ரோஜ்மாநகர் மன்னார் வளைகுடா கடலில் நிறுத்தப்பட்டிருந்த 5 நாட்டுப்படகுகள் நீரில் மூழ்கின. இதில் 4 படகுகள் மீட்கப்பட்டன.கீழமுந்தல் மன்னார் வளைகுடா கடலில் 20க்கும் அதிகமான நாட்டுப் படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு மற்றும் அதிகாலை பெய்த மழை மற்றும் சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மீனவர்கள் காட்டு ராஜா, கணேசன் ஆகியோரது இரண்டு நாட்டுப்படகுகள் கயிறு அறுபட்ட நிலையில் 200 மீ.,க்கு அடித்துச் செல்லப்பட்டு கடலில் வலைகள் மற்றும் தளவாட பொருட்களுடன் மூழ்கியது.இதையறிந்த மீனவர்கள் நேற்று காலை 6:00 மணிக்கு மற்றொரு நாட்டுப் படகின் உதவியுடன் மூழ்கிய இரு படகுகளில் ஒன்றை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மற்றொரு படகை தேடுகின்றனர்.கன்னிராஜபுரம் ஊராட்சி ரோஜ்மாநகர் மன்னார் வளைகுடா கடலில் நிறுத்தப்பட்ட 3 நாட்டுப்படகுகள் பேரலைகள் தாக்கத்தால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கின. படகு உரிமையாளர்களான ராயப்பன், ரிச்சர்ட், சூசை ஆகியோருக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்பிலான படகுகள் மூழ்கியதால் படகின் இன்ஜின், வலைகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்தன. நேற்று உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் கடலில் மூழ்கிய மூன்று நாட்டுப்படகுகளையும் மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
13-Dec-2024