கிழக்கு கடற்கரை சாலையில் கூண்டு வண்டி ஓட்டுவோரால் விபத்து அபாயம்
திருப்புல்லாணி : திருப்புல்லாணி, கீழக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூண்டு வண்டி இயக்குவதால் விபத்து அபாயம் உள்ளது.மூன்று சைக்கிள் வண்டியின் ஒரு பகுதியை டூவீலருடன் இணைத்து கட்டப்பட்டு அவற்றில் தேவையான அளவு பாரம் ஏற்றியும் செல்கின்றனர். ஒரு சிலர் சட்டவிரோதமாக அவற்றில் ஆட்களை ஏற்றிக் கொண்டும் செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் இண்டிகேட்டர் உள்ளிட்ட எவ்வித விளக்கு வெளிச்சமும் இல்லாததால் விபத்து அபாயம் நேரிடுகிறது தன்னார்வலர்கள் கூறியதாவது: திருப்புல்லாணி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு கூண்டு வண்டிகளின் இயக்கம் வெகுவாக இயங்கி வருகிறது. இவ்வண்டியில் ஒரே நேரத்தில் ஆறு பேர் வரை பயணம் செய்யலாம். பயன்படாத நிலையில் உள்ள ஆட்டோ உதிரி பாகங்களை சேர்த்து அவற்றிலும் கொண்டு வண்டி மூலமாக இயக்குகின்றனர். பெரும்பாலும் இவ்வண்டி இயக்குபவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை. எனவே அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சட்டவிரோதமாக இயங்கும் கூண்டு வண்டிகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.