பரமக்குடியில் ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டு மைதானங்கள் வீரர், வீராங்கனைகள் தடுமாற்றம்
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு களங்கள் உரிய கட்டமைப்பு இன்றி முறையற்றதாக உள்ளதால் வீரர், வீராங்கனைகள் தடுமாற்றத்துடன் போட்டியை எதிர்கொள்கின்றனர். பரமக்குடி கல்வி மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் விளையாட்டு ஆசிரியர்கள் இருக்கும் சூழலில் மைதானங்கள் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. இச்சூழலில் பள்ளி அளவிலான குறுவட்ட போட்டி கள், மாவட்ட போட்டிகள் நடக்கிறது. இவற்றில் வெற்றி பெறுவோர் மாநில மற்றும் தேசிய போட்டிக்கு செல்கின்றனர். பரமக்குடி மினி விளையாட்டு அரங்கம் 10 ஆண்டுகளாக எந்த வகையான செயல்பாடும் இன்றி முடங்கி கிடக்கிறது. இதனால் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நயினார்கோவில், பரமக்குடி உள்ளிட்ட குறுவட்ட தடகளப் போட்டிகள் மற்றும் பல்வேறு அரசு பள்ளிகளில் போட்டிகள் நடக்கிறது. அப்போது விளையாட்டு அலுவலர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் 100 மீ., 200 மீ., 400 மீ., என ஓடுதளம் சீராக இல்லாமல் தடுக்கி விழும் சூழல் உள்ளது. இந்த டிராக்குகளிலேயே 1500 மீட்டருக்கு மேல் பல சுற்றுகள் ஓடுகின்றனர். மேலும் நீளம் தாண்டுதல் களம் ஒரு அடிவரை பள்ளமாகி அதில் குதிக்கும் வீரர்களுக்கு சுளுக்கு முதலான காயங்கள் உண்டாகிறது. இதே போல் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் களங்கள் முறையின்றி உள்ளது. தடை தாண்டும் ஓட்டத்திற்கான மரச் சட்டங்கள் இருப்பதில்லை. இது போன்ற குளறுபடிகளால் மாநில போட்டிகளுக்கு செல்லும் வீரர்கள் சிரமம் அடைகின்றனர். ஆகவே விளையாட்டு அலுவலர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த மற்றும் உடல் நலனில் அக்கறை செலுத்தும் நோக்கில் செயல்பட வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.