உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி மையம் அமைக்க முடிவு

மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி மையம் அமைக்க முடிவு

ராமநாதபுரம்:துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளே மசாலா பொருட்கள் தயார் செய்து சந்தைப்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் மிளகாய் மதிப்பு சங்கிலி அமைக்கப்பட உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேரில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. இதில் குண்டு மிளகாய் மட்டும் 14ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. அதிக காரத்தன்மை காரணமாக ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகரித்த போதும் விலை கிடைக்காமல் மிளகாய் விவசாயிகள் ஆண்டுதோறும் இழப்பை சந்திக்கின்றனர். இதையடுத்து மிளகாயை மதிப்புக்கூட்டி மசாலாப்பொருட்கள் தயாரித்து அதிக லாபம் பெறும் வகையில் தமிழ்நாடு உணவு பதப்படுத்தல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விவசாயக்குழுக்கள் அடங்கிய மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி மையம், விவசாயிகள் பயிற்சி மையத்தை ராமநாதபுரத்தில் அமைக்க உள்ளனர். இதுகுறித்து வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. இம்மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் மசாலா பொடி தயார் செய்து அதனை நேரடியாக சந்தைப்படுத்துவது, ஏற்றுமதி செய்வது, அதற்குரிய உள்கட்டமைப்பு ஏற்படுத்தல், தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது.தரமாகவும், இயற்கை விவசாயமாகவும் இருந்தால் ஏற்றுமதியாளர்கள் அதிக விலைக்கு வாங்குகின்றனர். இதுதொடர்பாக நான்கு மாவட்ட விவசாயிகள், வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறை, ஏற்றுமதியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தி கருத்து பெறப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி