களைக்கொல்லி மருந்து தெளிப்பானுக்கு கிராக்கி
கடலாடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயல்களில் ஈரப்பதம் உள்ள நிலையில் பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து தெளிப்பதில் ஆர்வம் காட்டுவதால் தெளிப்பான்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.பொதுவாக வயல்களில் நீர் மற்றும் ஈரப்பதம் உள்ள இடங்களில் பசுமையாக வளர்ந்து வரும் நெற்பயிர்களுக்கு மத்தியில் அதிகஅளவு பயனில்லாத களைச் செடிகளும் சேர்ந்து வளர்கிறது. இவற்றை அப்புறப்படுத்துவதற்கு களைக்கொல்லியை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.கைத்தெளிப்பான் மற்றும் மோட்டாரில் இயக்கப்படும் ஸ்பிரேயர் மூலமாக களைக்கொல்லி தெளிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பழுதடைந்த ஸ்பிரேயர்களை கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் பழுது நீக்கியும் வருகின்றனர். சாயல்குடி விவசாயி சத்தியமூர்த்தி கூறியதாவது:மோட்டாரில் இயங்கும்களைக்கொல்லி ஸ்பிரேயர் ரூ.3500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை மொத்தமாக வைத்திருந்து வாடகைக்கு விடுவோர் ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் வாடகை வசூலிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு களைக்கொல்லி தெளிப்பதற்கு கூலியாக ரூ.600 வழங்கப்படுகிறது. தற்போது ஈரம் தேங்கியுள்ள நிலையில் விவசாயிகள் ஆர்வமுடன் விவசாயப் பணிகளை மேற்கொள்கின்றனர்.எனவே வேளாண் பொறியியல் தொழில் நுட்பத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் களைத்தெளிப்பான் ஸ்பிரேயர் மெஷின் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.