பட்டியலின மக்களுக்கு அரசு வேலை வழங்கியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் எத்தனை பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வி.சி., மாவட்ட செயலாளர் அற்புதக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், ரேஷன் கடை, இரவு நேர காவலர்கள், விடுதி பாதுகாவலர், சமையலர், சத்துணவு அமைப்பாளர், தலையாரி உள்ளிட்ட துறைகளில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு வேலைகளில் நியமனம் செய்யப்பட்டதில் கிறிஸ்தவ தேவேந்திரகுல வேளாளர், கிறிஸ்தவ அருந்ததியர், கிறிஸ்துவ பறையர் ஆகிய பிரிவில் எத்தனை பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தாட்கோ மூலம் தொழிற்கடன், கல்விக்கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்படும் கடைகளில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பார்லிமென்ட், சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி கிராமங்களில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.