| ADDED : டிச 04, 2025 05:32 AM
ராமேஸ்வரம்: 14 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் சிக்கினாலும் விலை வீழ்ச்சி அடைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நவ.,14 முதல் வங்கக் கடலில் சூறாவளி வீசியதால் கடல் சீற்றம் மற்றும் டிட்வா புயலால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். புயல் வலுவிழந்ததால் ராமேஸ்வரம் பகுதியில் காற்றின் வேகம் தணிந்தது. இதனால் 14 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் பாம்பனில் இருந்து 90 விசைப்படகில் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று காலை பாம்பன் கரை திரும்பினர். இதில் பெரும்பாலான படகில் சாவாளை மீன், முண்டக்கண்ணி பாறை மீன், ஓரா மீன், வெளமீன்கள் ஏராளமாக சிக்கின. அவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், கார்த்திகை மாதம் விரதம் காரணமாக மீனுக்கு மவுசு குறைந்தது. இதனால் பாம்பன், கேரளா மீன் வியாபாரிகள் கிலோ ரூ.20 முதல் ரூ.50 வரை என விலை குறைத்து வாங்கினர். அதிக மீன்கள் சிக்கியதால் அதிக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்த மீனவர்களுக்கு விலை வீழ்ச்சி ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.