திருப்பாலைக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு
ஆர்.எஸ்.மங்கலம் : கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை கிராமப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உப்பு நீராக உள்ளதால் கிணறுகள், ஆழ்துளை கிணற்று நீர் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள், உப்புத் தன்மை வாய்ந்ததாக உள்ளன. இதனால் காவிரி கூட்டு குடிநீரையே அப்பகுதி மக்கள் முழுமையாக நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் காவிரி கூட்டு குடிநீரும் வறட்சியால் முழுமையாக சப்ளை செய்யப்படாததால் அப்பகுதியினர் குடிநீருக்கு கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். பல ஆண்டுகளாக இப்பகுதியில் குடிநீர் பிரச்னை நிலவும் நிலையில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு சட்டசபை, லோக்சபா தேர்தலின் போதும் ஓட்டு சேகரிக்கும் போது வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும், கடற்கரை கிராம குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதியளிக்கின்றனர். வெற்றி பெற்ற பின் இது குறித்து கண்டு கொள்வதில்லை என்ற நிலை தொடர்கிறது. இதனால் பல ஆண்டுகளாக உள்ள குடிநீர் பிரச்னை இன்றளவும் தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியுள்ளனர்.