அரசு பள்ளி மாணவிகளுக்கு அகல்விளக்கு விழிப்புணர்வு பயிற்சி
பரமக்குடி: பரமக்குடி அருகே மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இணைய பாதுகாப்பு குறித்த அகல்விளக்கு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. அப்போது மாணவி களுக்கு இணைய வழியில் ஏற்படும் ஆபாச தொந்தரவுகள், தீங்குகள் மற்றும் குற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சட்ட விளக்கம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இணைய வழி ஆபாச மிரட்டல், இணையத்தில் பின் தொடர்தல், புகைப்பட உருமாற்றம், தனிப்பட்ட தகவல்களை தவறாக பகிர்தல், இணையவழி நிதி மோசடி குறித்து விளக்கப்பட்டது. பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் கணேசபாண்டியன், துணை முதல்வர் பாக்கியம், ருக்மணி, சாரதா தேவி பேசினர். சண்முகவேலு நன்றி கூறினார்.